உலக சந்தையில் இலங்கையின் பங்கை நிலைநிறுத்த ஜனாதிபதி வலியுறுத்தல்!
புதிய தலைமுறை திட்டங்கள் மூலம் உலக சந்தையில் இலங்கையின் பங்கை அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வணிகமயமாக்கல் அணுகுமுறையை நிறுவுவதற்கான திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மனிதத் தேவைகள் மாறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மட்டுமே மாறுகிறது என்றும், இந்த மாதிரியை புதுமை மூலம் உருவாக்க முடியும் என்றும் கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பான இலங்கையின் கொள்கை உலக சந்தையில் அதன் சரியான இடத்தை அடையத் தவறிவிட்டது என்றும், உலகில் தொழில்நுட்பத்துடன் கூடிய சந்தை மாதிரியில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை பழைய கருத்துக்களில் சிக்கித் தவிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளை உருவாக்கிய நிறுவனங்கள் உலகையே வென்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகின் முதல் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் என்று கூறினார்.
உலகில் வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப பாடத்திற்கு முன்னுரிமை அளித்து வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், இலங்கையில் தொழில்நுட்ப பாடம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சமூக அவலங்களை ஒழிப்பதற்கு மட்டுமல்லாமல், மக்கள் உரிமைகள் இல்லாமல் அவதிப்படுவதால், வறுமை ஒழிப்பு அவசியம் என்றும், எனவே, கிராமப்புற வறுமையை ஒழிக்க, புதிய தலைமுறை மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை அணுகும் உரிமையை அந்த மக்களுக்கு வழங்குவது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார்.