என்பிபி அரசு அரசியல் அநாகரித்தை அம்பலப்படுத்தியதோடு தமிழர்களையும் ஏமாற்றயுள்ளனர்!
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரால் இன்றுவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும்.
தமிழர் தாயக மண்ணான வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் நின்று தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என உறுதியளித்து சென்றதன் ஈரம் காயும் முன்னே அவர் அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை, அவர்களின் அரசியல் அநாகரித்தை அம்பலப்படுத்தி உள்ளதோடு வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ? இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே குறிப்பிட்டிருந்தார். அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை.
இது அரசாங்கத்திற்குள் பிளவையே வெளிபடுத்துகின்றது? தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு துளி நகர்வையேனும் தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளப் போவதில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது. கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் பேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களின் அரசியலை பயங்கரவாதத்திற்குள் முடக்கி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுக் கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன் நிற்கின்றது என்பது தெளிவாகின்றது. தற்போது சிறைகளில் 10 பேரும் குறைவான அரசியல் கைதிகளை உள்ளனர். இவர்களில் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர். இவர்களை பயங்கரவா தடை சட்டத்திற்கு வெளியே எடுத்து விடுதலை செய்யக்கூடாது என்பதில் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளதோடு; தண்டனை காலத்தையும் கடந்து சிறையில் வாடும் அவர்களின் வாழ்வை சிறைக்குள்ளேயே கொலை செய்வதற்கும் முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.
கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறைக்குள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தையும் தொடர்ந்தனர். இவர்களின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள மக்களின் ஆதரவோடு பல்வேறு வடிவங்களில் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கண்ட போதும் அது என்னால் வரை பலன் அளிக்கவில்லை.
நல்லாட்சி எனக்கூறப்படும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் அமைச்சி பதவிகள் இருந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சியில் அமர்ந்து அரச சுகபோகங்களை அனுபவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை வேதனையோடு மீண்டும் வெளிப்படுத்துவதோடு, அரசியல் கைதிகள் விடயத்தில் இவர்களும் ஆட்சியாளர்களின் சிந்தனையிலேயே இருந்தனர் என்பதே உண்மை. விடுதலைக்கான நீலி கண்ணீரையே வடித்தனர். தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு கூறுவது அரசியல் ஏமாற்று நாடகமே. தமிழர் அரசியல் விடுதலைக்கான செயற்பாட்டினை போராளிகளும், மாவீரர்களும், அரசியல் கைதிகளும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
இன்றும் வைத்திருக்கின்றனர்(சோரம் போனவர்களைப் தவிர ஏனையோர்) என்பதை மறக்க முடியாது. இவர்களைத் தவிர்த்து அல்லது மறந்து விடுதலை அரசியல் செய்வது என்பது அரசியல் கொலைக்கு ஒப்பாகும். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடகிழக்கு எங்கும் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் மேலும் வலுப்பெறல் வேண்டும். இது குறுகிய அரசியல் நோக்கத்திற்கு அப்பால் நிகழ் வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.
இதற்கு வடக்கு கிழக்கை பிரதிதித்துவப்படுத்துபடுத்தி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து விடுதலையை துரதப்படுத்தல் வேண்டும் எனவும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் கோட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவென பல்வேறு நாடுகளிடம் மண்டியிட்டு நாட்டின் இறைமையை, அரசியலை, வளங்களை தாரை வார்த்து சமரசம் பேசி பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் ஆட்சியாளர்கள் (மிக அன்மையில் இந்தியாவோடும் தற்போது சீனாவுடன் செய்து கொண்டிருக்கின்ற பந்தங்கள் உட்பட) இந்நாட்டில் மிக நீண்ட கால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட தேசிய இனமான தமிழர்களோடு அரசியல் ஒப்பந்தம் செய்ய தயங்குவது ஏன்? நாட்டின் எதிர்காலம் நலன் கருதி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளோடு முன் செல்ல அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து ஆட்சியாளர்கள் தம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்கின்றோம்.