மட்டக்களப்பில் கன மழை: திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள்: மக்களுக்கு எச்சரிக்கை
பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப் பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.
இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், போக்குவரத்து செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பாலையடிவட்டை - வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர் - ராணமடு வீதி, வெல்லாவெளி - உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப் பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்