உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் மையமாக மாறவுள்ள இலங்கை: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் நிர்மாணிக்கவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் உள்ளூர்ச் சந்தைக்கு வெளியிடப்படும் எரிபொருளின் சதவீதம் குறித்து உடன்பாடொன்றை எட்டுவதற்கு சுமார் ஒரு மாதமாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பான உடன்பாடுகள் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும். சீன அரசின் சினோபெக் நிறுவனம் தொடர்பான நிலம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும்.
உதாரணமாக, சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும், அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது.
எனவே, சினோபெக் நிறுவனத்தினால் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்