விமானிகளின் சட்டையை கிழிப்பது ஏன்?
![விமானிகளின் சட்டையை கிழிப்பது ஏன்?](https://ms.lanka4.com/images/thumb/1739477908.jpg)
விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? ஆம், என்றால் ஒரு சில பைலட் பயிற்சி பள்ளிகளில், பலரது சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களையும், குறியீடுகளையும் நீங்கள் காண முடியும். சட்டைகளின் பின் பகுதியை மட்டும் ஏன் கிழித்து தொங்க விட்டுள்ளனர்?
அதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? என நீங்கள் யோசனை செய்திருக்க கூடும். பைலட்களுடைய சட்டையின் பின் பகுதியை கிழித்து தொங்க விடுவது என்பது நகைச்சுவைக்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ செய்யப்படும் விஷயம் கிடையாது.
மாறாக மாணவர்களாக இருந்து பைலட்களாக உருவெடுப்பவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான நடவடிக்கைதான் இது. அதாவது பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்னர், அவர்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும்.
பைலட்டாக உருவெடுக்கும் மாணவர்களுடைய சட்டையின் பின் பகுதியை, அவரது வழிகாட்டிதான் கிழிப்பார். இந்த பாரம்பரிய நடவடிக்கை நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதை போல், இதற்கான காரணமும் வியப்பை கொடுக்கிறது. எந்தவொரு பைலட்டின் வாழ்க்கையிலும், விமானத்தை முதல் முறையாக தனியாக இயக்குவது என்பது மிக பெரிய சாதனைதான்.
முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, தங்களது வழிகாட்டியின் தலையிடுதல்கள் எதுவும் இல்லாமல், தாங்கள் கற்று கொண்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் சுயமாகவே செய்ய வேண்டும்.
விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் செய்வதும், லேண்ட் செய்வதும்தான் மிகவும் சவாலான விஷயங்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்தையும், வழிகாட்டியின் உதவிகள் இல்லாமல் மாணவர்கள் செய்ய வேண்டும்.
விமானத்தை தனியாக இயக்குவதற்கு தயாராகி விட்டேன் என்பதை மாணவர்கள் காட்டும் தருணம் இது. விமானத்தை தனியாக இயக்குவது என்பது பைலட் லைசென்ஸ் பெறுவதன் முக்கியமான ஒரு பகுதி. எனவே முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்பதில் புதிய பைலட்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் அவர்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்பு நடக்கும் விஷயம்தான் நமக்கு ஆச்சரியம். முதல் முறையாக விமானத்தை தனியாக வெற்றிகரமாக இயக்கி விட்டு வந்த பின்னர், புதிய பைலட்டுடைய சட்டையின் பின் பகுதியை அவரது வழிகாட்டி கத்தரிக்கோலால் கிழிப்பார்.
பின்னர் கிழிக்கப்பட்ட சட்டையில், புதிய பைலட்டின் பெயர் மற்றும் அவர் முதல் முறையாக தனியாக இயக்கிய விமானத்தின் விபரங்கள் எழுதப்படும். அத்துடன் ரன்வே மற்றும் ஏர்போர்ட் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்படும்.
இதனைதான் பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்க விடுகின்றன. சட்டையின் பின் பகுதியை கிழிக்கும் இந்த நிகழ்வு, வழிகாட்டிகள் தங்கள் மாணவர்கள் மீது, அதாவது புதிய பைலட்களின் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
ஹெட்செட்கள் மற்றும் ரேடியோ கம்யூனிகேஷன் ஆகியவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, அதாவது மனிதர்கள் பறக்க தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய திறந்தநிலை காக்பிட் கொண்ட விமானங்களில்தான் மாணவ பைலட்களுக்கு, வழிகாட்டிகள் பயிற்சி வழங்குவார்கள்.
இந்த விமானங்களில் மாணவர்கள் முன்னே அமர்ந்திருக்க, வழிகாட்டிகள் பின்னால் அமர்ந்திருப்பார்கள். தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது.
எனவே மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுக்க வேண்டும். இதன் பின்னர் மாணவ பைலட்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பியதும், தேவையான ஆலோசனைகளை வழிகாட்டிகள் அவர்களுக்கு வழங்குவார்கள்.
மாணவ பைலட்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின், இப்படியான ஒரு வழக்கத்தை கடை பிடிக்கிறார்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)