லெனின் கொள்கைக்கு அமைய செயற்படும் இந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்!

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையின் அதிகாரங்களை வலது கையில் வழங்கி இடது கை ஊடாக பறிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
ஆகவே சமஸ்டியாட்சி முறைமை ஊடான அதிகார பகிர்வின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இருப்பினும் இந்த மாகாண சபை முறைமையின் தற்போதைய நிலைமையை ஆராய வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவும், அதிகார பகிர்வாகவும் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை தற்போது முழுமையாக முடக்கி விடப்பட்டுள்ளது.அதிகாரங்களையும், பணிகளையும் பகிர்ந்தளிக்காது தீர்வு காண முடியாது. அந்தந்த மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாக பகிர்ந்தளித்திருந்தால் இந்த நாடு இன்று வங்குரோத்து நிலையடைந்திருக்காது.
லெனின் கொள்கைக்கு அமைய செயற்படுவதாக குறிப்பிடும் இந்த அரசாங்கம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிர்ந்தளித்தால் தான் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அபிவிருத்தியடைய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



