இலங்கையிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம்!

மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 12.50 மணியளவில் 7.7 ரிக்டர் என்ற அளவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.
இந்த புவிநடுக்கத்தின் மையம் மியன்மாரின் சகைங் நகரிலிருந்து வட மேற்கு திசையில் 16 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் காணப்படுகின்றது.
மியன்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தாய்லாந்திலும், தென் சீனாவிலும் வட கிழக்கு இந்தியாவிலும் உணரப்பபட்டுள்ளது.
இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்புக்கள் ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1400 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது.
எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.



