இன்று புனித நோன்பு பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று கூடிய பிறைகுழு ஏகமனதாக தீர்மானித்தது.
ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் பிறை குழு உறுப்பினர்கள் முஸ்லிம் சமயம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் அதன் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன்படி, இன்றைய தினம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறும் பிறை குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
உலகெங்கிலும் பசியால் வாடும் மக்களுக்கு தானதருமம் செய்யவும், உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள, இந்த மாதத்தை ஒரு சிறந்த வாய்ப்பாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.



