மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு!
பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவான வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்க நேரிட்டுள்ளது.
சபையில் நிறைவெண் இல்லாத காரணத்தினால் இவ்வாறு புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த லசந்த விக்கிரமசேகரவின் படுகொலை காரணமாக, அந்தப் பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாகியிருந்தது.
புதிய தவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்வது கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தென் மாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெறவிருந்த போதிலும், நிறைவெண் இன்மையால் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, 45 உறுப்பினர்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று (26) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் 22 உறுப்பினர்கள் மட்டுமே சபைக்கு வருகை தந்திருந்ததன் காரணமாக, நிறைவெண் இன்மையால் தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கையை மீண்டும் ஒத்திவைக்க உள்ளூராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.