இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம்!
இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கோவில்வாடி மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த அமொஸ்டின்,ஜோன்தாஸ், பரலோக ஜெபஸ்டின் ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மீனவரிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் மூவரையும் வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து கோயில்வாடி மீனவர்கள் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர் அப்போது இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று முதல் தொடர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடபோவதாக முடிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று முதல் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டபம் கோயில்வாடி மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
மீனவர்களின் இந்த காலவரற்றை வேலை நிறுத்தம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் மண்டபம் கோயில்வாடி மீன்பிடித் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.