மலையக மக்களுக்கு நிரந்தர காணிகள் யாழ்ப்பாண உள்ளிட்ட வடக்கில் காணிகள்!
டிட்வா பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கான நிரந்தர, பாதுகாப்பான காணியை பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையை மானிடம் பூமிதான இயக்கம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் 25 குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மானிடம் பூமிதான இயக்கத்தின் தலைவர், தேசிய ஒருங்கிணைப்பாளர் பரா.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் காணி பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த கொடையாளர்கள், காணிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் அந்த இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் காணிகள் வழங்கக்கூடிய இடங்கள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மலையகத்தில் பாதுகாப்பான இடங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அங்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் இயலுமான சாத்தியங்கள் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளையும் ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, சுயவிருப்பின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் குடியேற முன்வரும் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.