புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த செயற்படும் அரசாங்கம் - கைது நடவடிக்கைகள் குறித்து நாமல் விமர்சனம்!
புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பார்க்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டள்ள அவர், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருக்கின்றார். மறுபுறம் பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பாளர் ஜொஹான் பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜனநாயக அரசியலில் ஈடுபட்டமைக்காக வடக்கு, கிழக்கிலுள்ள தலைவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது.
இந்த அரசாங்கம் அரசியல் ரீதியில் வங்குரோத்தடையும் போதும், மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போன போதும் அவற்றை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கம் மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதேசசபைத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தான் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் பிற்போடுகின்றது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சப்படுகிறது. அதற்காக தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்துவதை அனுமதிக்க முடியாது. மக்கள் அவர்களது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”