மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உணவு வழங்கும் சிறப்பு திட்டம் இன்று முதல் அமுல்!
அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சுவையான உணவை வழங்கும் சிறப்புத் திட்டம் இன்று (6) முதல் மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முதன்முறையாக, அரச மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு உயர்தரமான, ஊட்டச்சத்து மிக்க மற்றும் கவர்ச்சிகரமான முறையில் உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டம் (6) மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆரம்பமாகிறது.
அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நோயாளர்களுக்குச் சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவது அவசியம். மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தச் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
மருத்துவமனையின் சமையலறை நவீனமயப்படுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு உணவு சமைக்கக்கூடிய சகல நவீன வசதிகளும் கொண்ட சமையலறை அபேக்ஷா மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 'உணவு மற்றும் பானங்கள் பிரிவு' எனப் புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கமைய சோறு, கறி, காய்கறிகள் என அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்படாமல், ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்கும் வசதி கொண்ட விசேட தட்டுகளில் உணவு வழங்கப்படும்.
இது நோயாளிகளுக்கு உணவின் மீது விருப்பத்தையும் மனநிறைவையும் ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் சஜித மல்லவாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், "வீட்டு உணவுக்கு நிகரான அல்லது அதைவிட மேலான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவதே எமது நோக்கம். சரியான ஊட்டச்சத்து மூலம் நோயாளிகளின் உடல் உபாதைகளைக் குறைக்க முடியும்" என்றார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”