ஜே.வி.பி.க்கு நாட்டை ஆளத் தெரியாது! சாமர சம்பத்
மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கு அரசியல் புரியலாம். ஆனால் நாட்டை ஆளத் தெரியாது. அதுதான் இன்றைய சிக்கலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்த எமது திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
10-11 வருடங்களாகக் கட்சித் தலைமையகத்திற்கு வராத பல முக்கிய அரசியல்வாதிகள் இன்று வந்துள்ளனர். உதாரணமாக, ரத்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க மற்றும் ரமேஷ் பத்திரன போன்றோர் இன்று வருகை தந்துள்ளனர்.
கட்சி இப்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. எமது புதிய தலைவர் பதவியேற்ற பிறகு கட்சியின் யாப்பில் மாற்றங்களைச் செய்துள்ளார். கடந்த மாதம் புதிய செயற்குழு மற்றும் அரசியல் குழு நியமிக்கப்பட்டது. குறுகிய காலத்துக்குள் நாட்டில் பெருமளவான அரசியல் பணிகளைச் செய்த கட்சியாக நாம் இருக்கிறோம். பாராளுமன்றத்தில் இன்று யார் அதிகமாகப் பேசுகிறார்கள்? யார் அதிக கேள்விகளை எழுப்புகிறார்கள்? நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுமாறு மக்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாமர சம்பத் ஆகிய நானே பாராளுமன்றத்தில் அதிகளவில் குரல் கொடுக்கிறேன்.
எனது அலுவலகம் இப்போது திறக்கப்பட்டுள்ளது, மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். கட்சி தமக்குத்தான் சொந்தம் என்று சிலர் உரிமை கோருகின்றனர். ஆனால், இந்தக் கட்டிடம் யாருடைய பெயரிலும் எழுதிக் கொடுக்கப்படவில்லை. கட்சியின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளன. யார் வேண்டுமானாலும் வந்து பாடுபடலாம். அவர்களுக்குத் தகுந்த பதவிகள் வழங்கப்படும். ஜனாதிபதி வேட்பாளர் பதவியைக் கூட வழங்கத் தயாராக உள்ளோம்.
ஆனால், வழக்குத் தொடர்ந்து கொண்டு கட்சியை நடத்த முடியாது. வழக்குகளை தொடர்ந்து அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியாது, கட்சியைப் பிரித்து நாட்டை ஆள முடியாது. மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கு அரசியல் புரியலாம், ஆனால் நாட்டை ஆளத் தெரியாது. அதுதான் இன்றைய சிக்கல். எமது கட்சி தொடர்பில் 18 வழக்குகள் இருந்தன.
அதில் 17 வழக்குகளைப் பேசித் தீர்த்துவிட்டோம். விஜேதாச ராஜபக்ஷ எமக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டு எமது உப தலைவராக இணைந்துள்ளார். இப்போது தயாசிறி ஜயசேகர தொடர்ந்த வழக்கு மட்டுமே எஞ்சியுள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். முதலில் அவருக்கு 'தேசிய அமைப்பாளர்' பதவியை வழங்குவதாகக் கூறினோம்.
அவரும் அதற்கு முதலில் சம்மதித்தார். ஆனால், மறுநாள் பிற்பகல் வந்து 'எனது குடும்பத்தினர் இதற்குச் சம்மதிக்கவில்லை' என்று கூறிவிட்டுச் சென்றார். இருப்பினும், எமது கட்சியின் கதவுகள் அவருக்காக இன்னும் திறந்தே உள்ளன. யாரையும் நீக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு சிறந்த இளைஞர் அணியிடம் இந்தக் கட்சியைக் கையளிப்பதே எனது நோக்கம் என்றார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”