அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி 27 வயது இளைஞர் கொடூர மரணம்!
பிலியந்தலை, கொரகபிட்டிய பகுதியில் உள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த மிலிந்த மதுசங்க விஜேசிங்க என்ற திருமணமான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் மனைவியும் அதே அச்சு நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று, உயிரிழந்த இளைஞர் மற்றொரு ஊழியருடன் இணைந்து இயந்திரத்தின் தினசரி பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு ஒன்றைச் சரிபார்ப்பதற்காக மற்றைய ஊழியர் இயந்திரத்திற்குள் தலையை நுழைத்தபோது, உயிரிழந்த இளைஞரும் இயந்திரத்தின் மறுபுறமாகத் தலையை நுழைத்துள்ளமை அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அவர் தலையை நுழைத்த அதேவேளை, அச்சு இயந்திரம் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளது.
இதன்போது இளைஞரின் தலை இயந்திரத்தினுள் சிக்கியுள்ளது.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஏனைய ஊழியர்கள் உடனடியாக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமார சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
உடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (12) ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்