இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்!
இஸ்ரேலின் நெகேவ் (Negev) பகுதியில் அமைந்துள்ள தொழிற்துறை வலயம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலை இஸ்ரேலிய தீயணைப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஈரான் இன்று (04) இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஏவுகணையின் சிதறல்கள் நெகேவ் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள நியோட் ஹோவாவ் (Neot Hovav) தொழிற்துறை வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இஸ்ரேலியச் சேனல் 12 தகவலின்படி, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறித்த தொழிற்துறை வலயத்தில் 40க்கும் மேற்பட்ட இரசாயன மற்றும் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் இருப்பதால், நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
எனினும், தற்போதைய நிலவரப்படி எவ்வித அபாயகரமான கசிவுகளும் ஏற்படவில்லை என இஸ்ரேலிய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஏவுகணைத் தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் சிறு காயங்கள் காரணமாக சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(வீடியோ இங்கே )