2 மாதங்களாக பணிப்பாளர் இன்றி முடங்கியது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு (RMV) கடந்த இரண்டு மாதங்களாக புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாததன் காரணமாக, திணைக்களத்தின் அன்றாட நிர்வாகப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளதாக உள்ளகத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
வாகன முறைகேடு மற்றும் சட்டவிரோத வாகனப் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கடந்த மார்ச் மாத இறுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, திணைக்களத்தின் கொள்கை ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதில் பெரும் மந்தகதி ஏற்பட்டுள்ளது. நிர்வாக முடக்கம் காரணமாக, சுமார் 10 இலட்சம் வாகன இலக்கத் தகடுகளும், 3 இலட்சம் ஓட்டுநர் உரிமங்களும் விநியோகிக்கப்படாமல் கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளன.
இதனால் புதிய வாகனங்களை வாங்கிய உரிமையாளர்களும், ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பித்த பொதுமக்களும் வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தத் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்; "முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சு மட்டத்தில் கொள்கை ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
தற்போதைய தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் மூலம் மாத்திரம் விண்ணப்பங்களை அனுப்பும் 14 'ஓப்லைன்' (Offline) மாவட்ட அலுவலகங்களை, விரைவாக 'ஒன்லைன்' (Online) மயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
" மேலும், நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இராணுவம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிகள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் பங்களிப்புடன் தற்போது 50% இற்கும் அதிகமான நிலுவை அட்டைகள் அச்சிடப்பட்டு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மேலும் ஒரு மில்லியன் அட்டைகள் அச்சிடப்பட்டு கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய விநியோகஸ்தர் ஒருவரின் மூலம் மே 10 ஆம் திகதி முதல் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அனைத்து இலக்கத் தகடுகளும் விரைவில் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என திணைக்களம் உறுதியளித்துள்ளது.
(வீடியோ இங்கே )