தேசிய மருத்துவமனையில் 99 மில்லியன் ரூபாயில் புதிய நரம்பியல் பிரிவு திறப்பு!
99 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மருத்துவ வசதி இலங்கை தேசிய மருத்துவமனையில் (NHSL) 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட “நரம்பியல் மருத்துவ நிறுவகம்” (Institute of Neurology) இன்று (01) அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையிலும், பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி அவர்களின் பங்கேற்பிலும் காலை 10.00 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது.
மூளை, முதுகெலும்பு, நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் நரம்பியல் மருத்துவ சேவைகள் இந்த மறுசீரமைப்பின் மூலம் மேலும் விரிவாகவும் திறம்படவும் செயல்படவுள்ளது.
திறப்பு நிகழ்வுடன் இணைந்து, நிறுவனர் தேசமாண்ய விஞ்ஞான ஜோதி வைத்தியர் ஜே.பி. பீரிஸ் அவர்களின் புகைப்படம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் 62/63 எண் நரம்பியல் வார்டு தொகுதியும் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த புதிய வார்டு தொகுதி, ஒரு வார்டுக்கு 22 படுக்கைகள் என பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவாக இரண்டு வார்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தரை மாடியில் உள்ள உடற்பயிற்சி சிகிச்சை பிரிவின் மறுசீரமைப்புக்கு 22 மில்லியன் ரூபாவும், மூன்றாம் மாடியில் உள்ள பேச்சு, தொழில் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கேட்போர் அரங்கின் மேம்பாட்டுக்கு 25 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது 16 ஆவது வார்டில் நூற்றாண்டுக்கும் மேலாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நரம்பியல் பிரிவுகள் 3 மற்றும் 4, இனி அதிக வசதிகளுடன், நெரிசலின்றி சேவையளிக்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் டாக்டர் குமார் விக்ரமசிங்க உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே )