அவதூறு காணொளிகளை உடனே நீக்குங்கள்; மருத்துவர் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் கட்டளை!

#SriLanka #Jaffna #Court Order #Lanka4 #ADDA #Archuna #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
13 hours ago
அவதூறு காணொளிகளை உடனே நீக்குங்கள்; மருத்துவர் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் கட்டளை!

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்திய அதிகாரி ஒருவரைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்சார் ரீதியாக அவதூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் போலிப் பரப்புரைகளை மேற்கொண்டதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் வைத்தியர் ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நஜ்மி ஹூசைன் முன்னிலையில் தீர்ப்பு கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் முதலாவது எதிர்த்தரப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த வைத்தியர் ஜெயக்குமார் வெளியிட்ட கருத்துக்கள் தவறானவை அல்ல என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிப்பதாக நீதிவான் அறிவித்தார்.

இரண்டாவது எதிர்த்தரப்பான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, "அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பேச்சுச் சுதந்திரம் உள்ளது" என வாதிட்டார். 

எனினும், இந்த வாதத்தை நீதிவான் முற்றாக நிராகரித்தார். "நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, பேச்சுச் சுதந்திரத்திற்கு என்று வரையறுக்கப்பட்ட எல்லை ஒன்று உண்டு" எனச் சுட்டிக்காட்டிய நீதிவான், எந்தவொரு முறையான சான்றுகளும் இன்றி ஒரு வைத்திய அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அவர் ஊழல் புரிந்தார் என்றோ அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு எதிராக இனிமேல் எவ்விதமான அவதூறு மற்றும் போலிப் பரப்புரைகளையும் சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ முன்னெடுக்கக் கூடாது என அர்ச்சுனா இராமநாதனுக்கு தடை விதித்தார்.

மேலும், அவருக்கு எதிராக இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அவதூறான மற்றும் போலிப் பிரசாரக் காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிவான் கட்டளையிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ், இலங்கையில் தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டாவது விசேட வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4