பொசன் பண்டிகைக் காலத்தில் உந்துருளி ஓட்டுநர்கள் மீது குவியும் பொலிஸாரின் கவனம்!
பொசன் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் உந்துருளி (Motorcycle) ஓட்டுநர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக, அதிகப்படியான சத்தத்தை எழுப்பும் வகையில் சைலன்சர்களை மாற்றியமைத்து உந்துருளிகளைச் செலுத்தும் ஓட்டுநர்களை இலக்கு வைத்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேநாதீர, அதிக சத்தத்தை எழுப்பும் சைலன்சர்களுடன் பயணிக்கும் உந்துருளிகள் உடனடியாகப் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஓட்டுநர்களுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், இவ்வாறான சட்டவிரோத மாற்றங்களைச் செய்வதற்கு உடந்தையாக இருக்கும் மற்றும் சைலன்சர்களை மாற்றியமைத்துக் கொடுக்கும் கேரேஜ் (Garage) உரிமையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் நீடிக்கப்படும் என்றும், அவர்களும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே