டிஜிட்டல் அட்டையுடன் ‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவை யாழ்ப்பாணத்தில் தொடக்கம்!

#SriLanka #Jaffna #School #Bus #Digital #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
டிஜிட்டல் அட்டையுடன் ‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவை யாழ்ப்பாணத்தில் தொடக்கம்!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர். 

அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத் தலைவர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகின்றது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் உசனிலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. 

உசனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையும், உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையுமே ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்புதிய சேவையின் சிறப்பம்சமாக, மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்குப் பிரத்தியேக ‘டிஜிட்டல் அட்டை’ ஒன்று வழங்கப்படும். 

மாணவர் பேருந்தில் ஏறி குறித்த டிஜிட்டல் அட்டையைத் தொடுதிரையில் காண்பித்தவுடனேயே, அவர் பேருந்தில் ஏறிய நேரம் உள்ளிட்ட விவரங்கள் பெற்றோரின் தொலைபேசிக்கு உடனடியாகக் குறுஞ்செய்தியாகச் சென்றடையும். அதேபோன்று, மாணவர் பேருந்திலிருந்து இறங்கும்போதும் தொடுதிரையில் அட்டையைக் காண்பித்ததும், பாதுகாப்பாக இறங்கிய நேரத் தகவல் பெற்றோரின் தொலைபேசிக்குச் செல்லும். 

இதன் மூலம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்படுகின்றது. மிகவும் முன்மாதிரியான இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை, தனியார் பேருந்தின் உரிமையாளரே தனது சொந்தச் செலவில் நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு ‘சிசு செரிய’ சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் இரண்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

எதிர்காலத்தில் மாகாணத்தின் ஏனைய இடங்களுக்கும் இந்த பேருந்துச் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4