பாகிஸ்தானில் கல்வி நிலையம் இடிந்து விழுந்து விபத்து: 14 சிறுவர்கள் பரிதாப மரணம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் இயங்கி வந்த தனியார் பிரத்தியேக வகுப்பு நடத்தும் நிலையமொன்றின் கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததில், 7 - 11 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து குறித்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக மீட்புக்குழுவின் ஊடகப் பேச்சாளர் பரூக் அகமது தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது, குறித்த பழமையான கட்டடத்தின் கூரையில் ஓடுகளைப் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கூரையின் மீது அதிக எடை வைக்கப்பட்டதே, அது திடீரென இடிந்து வீழ்வதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஆகியோர் இந்தச் சம்பவத்திற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த அலட்சியப் போக்கிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே