அரசாங்க எம்.பி.க்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் நேரடி சவால்!
அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகோட விதான நேற்று நாடாளுமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, பொய்யானவை மற்றும் தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான அவதூறான கருத்துகளை வெளியிடுவதற்காக நாடாளுமன்ற சிறப்புரிமை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கடும் கவலையும் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கம் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றங்களைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தற்காலிக தேவைகள் அல்லது அரசியல் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், அவை வெளிப்படையான பொது நலன் மற்றும் நிரூபிக்கக்கூடிய நிறுவனத் தேவையின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புரிமையின் பாதுகாப்பிற்கு வெளியே, தாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகோட விதானவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே