பர்தா அணிந்து கடமையேற்கத் தடையா? கல்முனை வைத்தியசாலையில் சர்ச்சை!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள், கடமைக்கு அறிக்கை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படும் சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நியமனம் பெற்ற குறித்த பெண் உத்தியோகத்தர்கள், தங்களது கலாசார மற்றும் மத நடைமுறைகளுக்கு அமைவாக பர்தா அணிந்து வைத்தியசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் கடமைக்கு அறிக்கை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் தங்களது கலாசார நடைமுறைக்கு ஏற்ப உடை அணிந்து கடமையாற்றுவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி இருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் தங்களை கடமையேற்க அனுமதிக்காதமை தொடர்பில் உரிய விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனை தொடர்புகொண்டு வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த வைத்தியசாலை அத்தியட்சகர், அரச நிறுவனங்களில் தனிப்பட்ட விருப்பு, இனவாதம் அல்லது பிரதேசவாதத்தின் அடிப்படையில் செயற்பட முடியாது என்றும், அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை மற்றும் நடைமுறையில் உள்ள உரிய சுற்றுநிருபங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சம்பவத்தின் உண்மை நிலை மற்றும் சுகாதார அமைச்சின் நடைமுறையில் உள்ள சுற்றுநிருபங்கள், அரச சேவை விதிமுறைகள் ஆகியவற்றை தெளிவுபடுத்தி, அவற்றின் அடிப்படையில் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பர்தா உள்ளிட்ட கலாசார மற்றும் மத அடையாள உடைகளை அணிந்து அரச சுகாதார சேவையில் கடமையாற்றுவது தொடர்பான விதிமுறைகள் தெளிவாக அறிவிக்கப்படுவது, எதிர்காலத்தில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே