நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள்!
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்படுவதன் மூலம் தற்போது மேற்கொள்ளப்படும் உடற்பரிசோதனைகளை நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது எழும் குற்றச்சாட்டுகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஸ்கேனர் இயந்திரங்கள் நிறுவப்பட்ட பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியிலிருந்து உள்ளே வீசப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்காக, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே