நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களை சிதைக்கும் கருத்துகளுக்கு இடமில்லை – வடக்கு ஆளுநர் வேதநாயகன்
நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடாது. அறிவியல் ஆதாரங்கள், நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் இறுதிச் செயலமர்வு இன்று (13.08.2026) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உரையாற்றினார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் சார்பில் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ந. சுதாகரன் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர், விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி ஆகிய அனைத்தும் நிலத்தடி நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
எனவே, நிலத்தடி நீரைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் வாழ்வுரிமையையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக நிலத்தடி நீர் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யும் நவீன கண்காணிப்பு முறைமையும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என ஆளுநர் குறிப்பிட்டார்.
தொண்டமனாறு நீரேரித் தடுப்பணைத் திட்டத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட ஆளுநர், பல மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய நீர்வளப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில், குறுகியகால அழுத்தங்களின் அடிப்படையில் அவற்றின் அடிப்படை நோக்கத்தைப் பாதிக்கும் தீர்வுகளை முன்வைப்பது பொருத்தமற்றது என்றார்.
எதிர்காலத் தீர்மானங்கள் அனைத்தும் அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலத்தடி நீர்வளப் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல. திணைக்களங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால்தான் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே