போர்ச்சுகலில் முழு முகத்திரை அணிவதற்கு தடை
பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவதைத் தடை செய்யும் புதிய சட்டத்தை போர்ச்சுகல் அதிபர் அன்டோனியோ ஜோசே செகுரோ அங்கீகரித்துள்ளார்.
“புர்கா சட்டம்” என அந்நாட்டு ஊடகங்களால் அழைக்கப்படும் இந்தச் சட்டம், தீவிர வலதுசாரிகளின் முன்முயற்சியில் கொண்டு வரப்பட்டு, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பொது இடங்களில் முகத்தை மறைத்து அடையாளம் காண முடியாத வகையில் ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
பாலினம், மதம், வயது அல்லது பிறப்பு சார்ந்த காரணங்களுக்காக ஒருவரை முகத்தை மறைக்க கட்டாயப்படுத்துவதற்கும் சட்டம் தடை விதிக்கிறது.
இந்தச் சட்டம் நடைமுறையில் முழு முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்களை அதிகம் பாதிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் போர்ச்சுகல் இந்தச் சட்டத்தை “பாகுபாடானது” என்றும் “மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
முகத்தை மறைக்க விரும்பும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போராட்டங்களின் போது அடையாளத்தைப் பாதுகாக்க முகத்தை மறைப்பதற்கும் இந்தச் சட்டம் தடையாக இருக்கலாம் என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
சட்டத்தை மீறுவோருக்கு 150 முதல் 3,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம். எனினும், உடல்நலம், தொழில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் காலநிலை காரணங்களுக்கான சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள், தூதரகங்கள் மற்றும் விமானங்களிலும் விதிவிலக்குகள் உள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே