அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (02) காலை யாழ்ப்பாணம் தாவடியில் நடைபெற்றது.
1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் வி. தர்மலிங்கத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1918 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் கந்தரோடையில் விஸ்வநாதர் – சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அவர், தனது அரசியல் மற்றும் சமூகப் பணியின் பயணத்தை உள்ளூராட்சி மட்டத்திலிருந்து ஆரம்பித்தார். உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக அப்பதவியை வகித்தார்.
பின்னர் சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 1983 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.
தான் போட்டியிட்ட தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று, உடுவில் – மானிப்பாய் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக விளங்கினார்.
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அமரர் வி. தர்மலிங்கம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து தடவைகள் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே