வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் நிலை குறித்து பணிப்பாளர் விளக்கம்
வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு – அதிகாரிகள் வடமாகாணத்தில் உள்ள முக்கிய நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நீர்மட்டம் கவலைக்கிடமாகக் குறைந்துள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 5 மாவட்டங்களில் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் விசுவமடு குளம் உள்ளிட்ட 3 குளங்களில் மட்டுமே சுமார் 50 சதவீத நீர் இருப்பதாகவும், இரணைமடு குளம் உள்ளிட்ட 8 குளங்களில் சுமார் 25 சதவீத நீர் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரணைமடு குளத்தில் தற்போது சுமார் 25 சதவீத நீர் மட்டுமே காணப்படுவதுடன், நீரின் ஆழம் சுமார் 18 அடியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய 43 குளங்களிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாகவும், பெரும்பாலான குளங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவான நீரே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 குளங்கள் முற்றாக வற்றியுள்ளன. இதற்கு எல் நினோ தாக்கம் மட்டுமன்றி, புனரமைப்புப் பணிகளுக்காக குளங்களில் இருந்து நீர் திறந்து விடப்பட்டமை மற்றும் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வாரத்திற்கு சுமார் 1 முதல் 2 அங்குலம் வரை நீர் ஆவியாகி வருவது உள்ளிட்ட காரணிகளும் பங்களித்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
காலபோகச் செய்கை குறித்து அவதானம் காலபோகச் செய்கையை செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர்ப்பாசனத்திற்கான நீரை வழங்குவது சிரமமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் கிடைக்கும் மழைவீழ்ச்சி மற்றும் குளங்களின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்த பின்னரே காலபோகச் செய்கைக்கான நீர் விநியோகம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குடிநீர் விநியோகத்திற்கு பாதிப்பு இல்லை
இதேவேளை, இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது என வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே