NPPயின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 159 உறுப்பினர்களுக்கு எதிராகவும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியினர் தமக்கு அரசினால் வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவு மற்றும் எரிபொருள் தொடர்பான கொடுப்பனவுகளை, மக்கள் நலனுக்காக நேரடியாகப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தையிலுள்ள தலைமை அலுவலக வங்கிக் கணக்குக்குத் தொடர்ச்சியாக மாற்றி வைப்புச் செய்து வருவதாக குற்றம் சாட்டியே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர எழுத்து மையத்தின் நிறைவேற்று அதிகாரியும் 'தினன தகுண' அமைப்பின் பிரதிநிதியுமான தர்சன தந்த்ரிகே நேற்றைய தினம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை பதிவு செய்தப்பின் உரையாற்றிய அவர்,
இலங்கை அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற விதமுறைகளின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளத்துக்கு மேலதிகமாக, தொகுதி மக்களுடனான தொடர்பைப் பேணவும் அலுவலகங்களைப் பராமரிக்கவும் மாதத்துக்குச் சுமார் 100,000 ரூபாயும், தொலைபேசிகளுக்குச் சுமார் 50,000 ரூபாயும், அத்துடன் எரிபொருள் கொடுப்பனவு, அமர்வுப் படிகள் (அமர்வு ஒன்றுக்கு ரூ. 2,500) மற்றும் சாரதிகளுக்கான நிதி என மக்கள் பணத்திலிருந்து சட்டப்பூர்வமாக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியானது மக்கள் பிரதிநிதிகள் தமது தேர்தல் தொகுதி மக்களுக்குச் திறம்படச் சேவையாற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் அனைவரும் தமது 100 சதவீதக் கொடுப்பனவுகளையும் முறைமை சார்ந்த அடிப்படையில் கட்சியின் தலைமை வங்கிக் கணக்குக்கு மாற்றுவதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அரச நிதியைக் கட்சி நிதியத்துக்கு மாற்றுவதற்குச் சட்டத்தில் எவ்வித அனுமதியும் இல்லை என்பதால், இது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளுக்கு அமைவாக அரச அதிகாரத்தையும் பொது நிதியையும் துஷ்பிரயோகம் செய்து கட்சிக்குச் சட்டவிரோத நிதி நன்மைகளைப் பெற்றுக்கொடுத்த குற்றத்தின்கீழ் வருகின்றது.
ஆகவே இது தொடர்பில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே