இலங்கை அனிமேஷன் துறையின் முன்னோடி கிவந்த அர்த்தசத் காலமானார்.
இலங்கையின் முதலாவது அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரரான கிவந்த அர்த்தசத், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறைக்கு வழங்கிய முக்கிய பங்களிப்புகளுக்காகப் பெரிதும் போற்றப்பட்டவர்.
குறிப்பாக, இலங்கையின் அனிமேஷன் துறையில் அவர் முன்னோடியாக ஆற்றிய பணிகள், நாட்டின் சினிமா வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.
1979ஆம் ஆண்டு, இலங்கையின் முதலாவது அனிமேஷன் திரைப்படமான ‘துடுகெமுனு’ (Dutugemunu) திரைப்படத்தை அவர் உருவாக்கினார். அத்துடன், 2002ஆம் ஆண்டு, இலங்கையின் முதலாவது முப்பரிமாண (3D) டிஜிட்டல் கார்ட்டூன் திரைப்படமான ‘மஹாதேன முத்தாய் கோலயோ ரொத்தாய்’ (Mahadana Muththai Golayo Roththai) திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார்.
அனிமேஷன் மற்றும் கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற Derana Lux Film Awards விழாவில் ‘The Legend Award’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
கிவந்த அர்த்தசத்தின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் அனிமேஷன் துறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவரது மறைவு, நாட்டின் கலை மற்றும் திரைப்படத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே