கிளிநொச்சியில் விசேட பெண் நோயியல் மருத்துவ மையத்தின் வளங்களை வெளிமாவட்டத்திற்கு மாற்ற முயற்சி
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மருத்துவ மையத்திற்கு வழங்கப்பட்ட விசேட கட்டில்களை வெளிமாவட்ட வைத்தியசாலைக்கு வழங்குமாறு மாகாண மட்ட உயரதிகாரிகள் பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இயங்க ஆரம்பித்துள்ள இந்த விசேட பெண்நோயியல் மருத்துவமனைக்கு குறித்த கட்டில்கள் மிகவும் அவசியமாக தேவைப்படுவதாக சுட்டிக்காட்டும் மருத்துவ நிபுணர்கள், இக்காலகட்டத்தில் இங்குள்ள வளங்களை வெளியே கொண்டு செல்வது பொருத்தமற்றது என்றும், அது வைத்தியசாலையின் அன்றாடச் செயற்பாடுகளைப் பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மகப்பேறு விடுதிகளை வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மையத்திற்கு மாற்றி விட்டு அது இயங்குவதாக காட்டுவது அல்லது இங்குள்ள வளங்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு இதன் செயற்பாடுகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என பல்வேறு தரப்பினர்காளலும் கடந்த காலத்தில் எதிர்வு கூறப்பட்டது.
இருப்பினும் நீண்ட கால இழுபறிக்கு பின்னர் தற்போது குறித்த விசேட பெண்நோயியல் அலகானது செயற்பட மெதுவாக தொடங்கியுள்ள நிலையில் இங்குள்ள வளங்களை ஏனைய வைத்தியசாலைகளுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமற்றது.
எனவே, இப் பெண் நோயியல் மருத்துவமனைக்கு என பிரத்யேகமாக வழங்கப்பட்ட வளங்களை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை உயரதிகாரிகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சமூகத்தினரும், பிரதேசவாசிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே