கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்கள் – நல்லெண்ணப் பயணம் இன்று நிறைவு
இந்தியக் கடற்படையின் இரண்டு கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படையின் ஒரு கப்பலும் நல்லெண்ணப் பயணமாக கடந்த 26ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய கப்பல்களுடன், இந்தியக் கடலோரக் காவல்படையின் ‘சாரதி’ (Sarathi) கப்பலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
குறித்த கப்பல்கள் இன்று (28) தமது கொழும்புப் பயணத்தை நிறைவு செய்யவுள்ளதுடன், கொச்சியிலுள்ள தலைமைத் தளத்திற்குத் திரும்புவதற்கு முன்னர் சீசெல்ஸின் போர்ட் விக்டோரியா மற்றும் மாலத்தீவின் மாலே ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளன.
இந்தப் பயணம் நீண்டதூரக் கடல்சார் பயிற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த இளம் அதிகாரிகளுக்குக் கடல்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்தப் பயிற்சிப் படைப்பிரிவு செயற்பட்டு வருகிறது.
இதற்குக் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் டிஜோ கே. ஜோசப் தலைமை தாங்குகிறார். இப்பயணத்தின் போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் கப்பல்களைப் பார்வையிட்டதுடன், அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெறுநர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
மேலும், இந்த நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து பயிற்சி பெறுநர்களும் இணைந்துள்ளனர். இதனிடையே, பயிற்சிப் படைப்பிரிவின் மூத்த அதிகாரி மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதே பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘ஐ.என்.எஸ். தரங்கிணி’ கப்பல், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்தில் பயிற்சி பெறும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்காக கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.