கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற இலங்கை இளைஞர் கைது: உதவிய 3 பேரும் சிக்கினர்!

#India #SriLanka #Tamil Nadu #ARREST #Police #Investigation
Abi
1 hour ago
கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற இலங்கை இளைஞர் கைது: உதவிய 3 பேரும் சிக்கினர்!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் மற்றும் மண்டபம் மரைன் போலீசார் இணைந்து கைது செய்துள்ளனர். 

அவரை நாட்டுப் படகில் அழைத்து வந்து கரையில் இறக்கிவிட உதவியதாகக் கூறப்படும் மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பன் அருகே உள்ள குந்துகால் ஆர்ச் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் கியூ பிரிவு போலீசாரும் மண்டபம் மரைன் போலீசாரும் இணைந்து கடலோரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது நாட்டுப் படகில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மூவரைக் கண்ட போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.

இதையடுத்து, படகில் வந்த குந்துகால் குழந்தை இயேசு நகரைச் சேர்ந்த ராபர்ட் (40), பாம்பனைச் சேர்ந்த தினேஷ் (33) ஆகியோர் தப்பியோடியுள்ளனர். 

எனினும், இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்த கனிஸ்டன் என்ற இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது அண்ணன் துஷ்யந்தன் (32) கடந்த 2014ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மூலம் இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ளதுடன், தற்போது தமிழகத்தின் ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாச்சி பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் தனக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருப்பதால் சட்டபூர்வமாக விமானம் மூலம் இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டதாகவும் கனிஸ்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்காக இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த தனக்குத் தெரிந்த தானிஷ் அகமதுவிடம் உதவி கோரியுள்ளார். அவர், இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் (33) என்பவரைத் தொடர்புகொண்டு, கனிஸ்டனை நாட்டுப் படகில் அழைத்து வந்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் இறக்கிவிட ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தப் பயணத்திற்காக கனிஸ்டனின் அண்ணன் துஷ்யந்தன் படகுக் கூலியாக 40,000 ரூபாய் வழங்கியதாகவும், கெவின் ராஜுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த போலக் (26) என்பவரும் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தப்பியோடியவர்களைப் பிடிக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், ஒட்டன்சத்திரத்தில் வசித்து வந்த துஷ்யந்தன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் மற்றும் போலக் ஆகிய மூவரும் பிடிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் மண்டபம் மரைன் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தச் சட்டவிரோத கடல் பயணத்திற்கு உதவியதாகக் கூறப்படும் ஏனைய நபர்கள், அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொடர்புகள் குறித்தும் போலீசார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் உட்பட நால்வர் பிடிபட்டுள்ள சம்பவம் இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!