கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி பணிப்பாளர் நியமனம் ரத்து!
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக மேற்கொள்ளப்பட்ட நியமனத்தை கல்முனை மேல் நீதிமன்றம் இன்று ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நியமனத்தில் கல்விச் சான்றிதழ்கள் முறையாகச் சரிபார்க்கப்படாமை மற்றும் உத்தியோகபூர்வ புள்ளித் திட்டத்திற்கு முரணான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்து, கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன், குறித்த நியமனத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்துள்ளார்.
மேலும், எதிர்கால நியமனங்களின்போது முறையாகச் சரிபார்க்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.