நாட்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது – 81 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டெங்கு நோய் காரணமாக 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு தடுப்பு வாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய, டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய கொள்கலன்கள், பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றி, நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரத் தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.