கடும் மழையால் ஹட்டன் நகரில் வெள்ளப்பெருக்கு – நீரில் மூழ்கிய பேருந்து நிலையம்!
ஹட்டன் நகரில் இன்று (09) பிற்பகல் சுமார் 3 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன் பேருந்து நிலையம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
நகரில் தேங்கிய மழைநீர் பிரதான வீதியூடாகப் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேலுள்ள காமினிபுர பகுதியில் இருந்து பெருமளவிலான வெள்ளநீர் பேருந்து நிலையத்தை நோக்கிப் பாய்ந்ததால், அப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்குப் பிரிவின் ஒரு பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளிமாவட்டங்களில் இருந்து ஹட்டன் நகருக்கு வருகை தந்துள்ள சில வியாபாரிகள், தங்களது கடைகளில் சேகரமாகும் கழிவுகளைப் பைகளுடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் பிரதான வீதியில் வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவும் மழைநீரின் ஓட்டம் தடைப்பட்டு, வீதியில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.