உருளைக்கிழங்கு ரைஸ் சமைத்து பாருங்கள்.
Mugunthan Mugunthan
3 years ago
காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது, குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது மிகவும் விரைவாகவும், அதேசமயம் சுவையாகவும் சமைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். அவ்வாறு சாதம் மற்றும் குழம்பு வைத்து ஒவ்வொன்றுக்கும் தனியாக நேரம் செலவழிப்பது என்பதும் காலை நேரங்களில் முடியாத ஒன்றாகவே இருக்கும். எனவே குறைவான நேரத்தில் எளிமையாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
- பெரிய உருளைக்கிழங்கு – 2,
- வடித்த சாதம் – 2 கப்,
- நெய் – ஒரு ஸ்பூன்,
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்,
- பெரிய வெங்காயம் – ஒன்று,
- மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்,
- மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்,
- சீரகத்தூள் – அரை ஸ்பூன்,
- கரம் மசாலா – கால் ஸ்பூன்,
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,
- கடுகு – அரை ஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்,
- தயிர் – 3 ஸ்பூன்,
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்,
- உப்பு – அரை ஸ்பூன்,
- கருவேப்பிலை – ஒரு இணுக்கு,
- கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பைப் பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
- அவை நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- அதன்பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் இவற்றுடன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ள வேண்டும்.
- பின்னர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து உருளைக் கிழங்கினை நன்றாக வேக விட வேண்டும்.
- உருளைக்கிழங்கு பாதி அளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- சிறிது நேரம் இவற்றை நன்றாக வேகவிட்டு, அதன் பின் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தயிர் சேர்த்ததும் ஐந்து நிமிடங்கள் இந்த கலவையை சிறிய தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து உருளைக் கிழங்கினை அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
- பிறகு இந்த உருளைக்கிழங்கு கிரேவியுடன் இரண்டு கப் சாதம் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயாராகிவிட்டது.
- இதனை சுடசுட சாப்பிடும் பொழுது அவ்வளவு இன்பமாக இருக்கும்.
- குழந்தைகளுக்கும், அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கும் இந்த உருளைக்கிழங்கு சாதத்தை கொடுத்து அனுப்பினால் மதியம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவே இருக்கும்.