‘கத்தரிக்காய் கொத்சு’ செய்வது எப்படி?

‘கத்தரிக்காய் கொத்சு’ செய்வது எப்படி?

சிதம்பரம் ஸ்பெஷல் கத்திரிக்காய் கொத்சு எப்படி செய்வது. நேரடியாக குறிப்பை பார்த்து விடலாமா.

1/2 அரை கிலோ அளவு கத்தரிக்காய்களை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து புளிக் கரைசலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
இந்த கத்திரிக்காய் கொத்சு செய்வதற்கு ஒரு மசாலா பொடியை அரைக்கவேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும்.
வரமல்லி – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், வர மிளகாய் – 8 லிருந்து 10, உங்களுடைய காரத்திற்கு ஏற்ப, உங்கள் வீட்டில் இருக்கும் வரமிளகாய் காரம் எப்படி இருக்குமோ அதற்கு தகுந்தார்போல் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொருட்களை எல்லாம் கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ஃப்ரை செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொருட்கள் அனைத்தும் மிதமான தீயில் பொன்னிறமாக சிவந்து வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு இந்த பொருட்களை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொடியும் அப்படியே இருக்கட்டும்.
இப்போது கத்திரிக்காய் கொத்சு தாளிக்க செல்வோமா.
அடுப்பில் ஒரு அகலமான அடிகனமான கடாயை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
கொத்சு இரண்டு நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றால் எண்ணெய் அதிகமாக சேர்க்க வேண்டும்.
நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுக – 1/2 அரை ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, காய்ந்த மிளகாய் – 2, தோல் உரித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 200 கிராம், பூண்டு – 6 பல் தோல் உரித்தது, இந்த பொருட்களை சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை கடாயில் சேர்த்து கட்டாயமாக 4 லிருந்து 5 நிமிடங்கள் வதங்க வேண்டும்.
கத்தரிக்காய்கள் எண்ணெயில் வதக்கி தோல் சுருங்கி வந்தால்தான் கொத்சு சுவை அதிகரிக்கும்.
கத்திரிக்காய் வதங்கியதும் மீடியம் சைஸில் இருக்கும் – 2 தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து தக்காளி பழம் வதங்கும் வரை மீண்டும் வதக்க வேண்டும்.
(கடாயில் வெங்காயம் கத்தரிக்காய் சேர்ந்து வதக்கிய பின்புதான், கட்டாயம் தக்காளியை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)
தக்காளி வதங்கியவுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள் சேர்த்து விட்டு, அதன் பின்பு ஏற்கனவே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கடாயில் இருக்கும் கத்திரிக்காய்களையும் நீங்கள் சேர்த்த பொடியையும் ஒரு முறை நன்றாக கலந்து விட்டு 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு 5 நிமிடம் கத்தரிக்காய்களை வேகவையுங்கள்.
கத்திரிகாவில் மசாலா பொருட்கள் சேர்ந்து வெந்ததும் ஒரு மத்தில் அல்லது ஸ்மாஷரிலோ கத்தரிக்காய்களை லேசாக மசித்து விடவேண்டும். கத்தரிக்காய்களை கொழகொழவென ஆக்கி விடாதீர்கள்.
லேசாக மசித்து விடுங்கள். இந்த இடத்தில் கத்திரிக்காய் கொத்சுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, கொத்சுவை நன்றாக கலந்து விட்டு சுண்ட சுண்ட கொதிக்க விடுங்கள்.
புளி சேர்த்த கத்தரிக்காய் கொத்சு தொக்கு பதத்திற்கு வந்துவிடும். இதில் சேர்த்திருக்கும் புளியின் பச்சை வாடை நான்கிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் நீங்கிவிடும். இறுதியாக அடுப்பை அணைத்து விடுங்கள்.
அவ்வளவு தான். சூப்பரான கத்தரிக்காய் கொத்சு தயார்.
நன்றாக ஆற வைத்து விட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு, சுடசுட சாதத்திற்கு கூட இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

பின்குறிப்பு:

அரை கிலோ கத்தரிக்காய்க்கு மேலே சொன்ன அளவுகள் சரியாக இருக்கும். உங்களுக்கு கத்தரிக்காய் கூடவோ குறையவோ தேவைப்பட்டால் மற்ற மசாலா பொருட்களின் அளவுகளை பக்குவமாக கூட்டி குறைத்து சேர்த்துக்கொள்ளுங்கள். இதேபோல் புளியை கரைக்கும் போது ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்தால் போதும். புளியை ரொம்பவும் திக்காக, ரொம்பவும் தண்ணீராக வைத்துக் கொள்ளக்கூடாது. இதில் அரைக்கப்பட்டிருக்கும் மசாலா பொடி அத்தனையும் அரை கிலோ கத்தரிக்காய்க்கு சரியாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!