சீனாவில் வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு 338 கோடி அபராதம்
சீனாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெங் ஷூவாங். இவர் சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஒரு டி.வி. தொடருக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தில் அவர் வரி ஏய்ப்பு செய்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
டி.வி. தொடர் ஒப்பந்தத்தில் ஜெங் ஷூவாங் 2 ஆவணங்களை தயார் செய்துள்ளார். ஒரு ஆவணத்தில் தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போல குறிப்பிட்டு இருந்தார். அசல் ஆவணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவது போன்று குறிப்பிட்டிருந்த ஆவணத்தை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தார்.
இதன்மூலம் அவர் வரியை குறைவாக செலுத்தி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை ஜெங் ஷூவாங்குக்கு வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் ரூ.338 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் பிறப்பித்துள்ளது. மேலும் ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.