திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

Prabha Praneetha
3 years ago
திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் மணிரத்னம் மீது இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படம் 2 பாகங்களாக தயாராகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது. 

அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு நடிகர்கள் கார்த்தி, ரகுமானுடன் நடிகை திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டு இந்த பகுதியை  ஆண்ட ராணி அகில்யாபாயால் அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. நேற்று அக்கரை பகுதியில் நடிகை திரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. 

கரையில் வந்து இறங்கிய நடிகை திரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை திரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

நடிகை திரிஷா காலணியுடன் நடந்து வந்ததால் அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகாரும் தெரிவித்துள்ளன. 

இந்த பகுதியில் ஏற்கனவே சல்மான்கான் நடித்த ‘தபாங்-3’ படப்பிடிப்பின் போதும் சிவலிங்கத்தின் மேற்புறம் பலகை அமைத்து, அதில் காலணிகளுடன் நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பிறகு ‘யமுனா பக்லா தீவானா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!