பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணையும் யோகி பாபு
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.
இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபு தற்போது 2-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.