விராட் கோலி பற்றி புகழ்ந்த ஆஸ்திரேலியன் லெஜெண்ட் ஷான் வார்ன்
சிட்னி: விராட் கோலி இருக்கும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டு சிறப்பான வளர்ச்சி பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா நிர்ணயித்த 368 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 210 ரன்களுக்கு அல் அவுட்டாக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர், ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், "கேப்டன் விராட் கோலி அனைத்து வீரர்களின் மரியாதையையும் பெற்றுள்ளார். அவர்கள் அவரை ஆதரித்து அவருக்காக விளையாடுகிறார்கள். ஒரு அணி உங்களுக்காக விளையாடுவது ஒரு கேப்டனுக்கு மிக முக்கியமானது. விராட் அணியை நடத்தும் விதம், நாம் அனைவரும், 'நன்றி விராட்' என்று சொல்ல வேண்டும். அவர் அணியை வழிநடத்திய விதம், வெற்றிப் பெறுவோம் என்று அவர்களை நம்ப வைத்த விதம் அற்புதமானது. நம்பிக்கை என்பது விளையாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும்.
நீங்கள் வெற்றிப் பெறுவோம் என நம்பவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு நல்ல அணியாக இருந்தாலும் வெற்றி பெற மாட்டீர்கள். கோலி தனது அணிக்கு நம்பிக்கையைத் தருகிறார், அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. விராட் கோலி இருக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். தயவுசெய்து விராட் கோலி மிக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று நெகிழ்ச்சியுடன் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.