போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாகுபலி நடிகர் ராணா ஆஜர்

#Cinema
Prasu
3 years ago
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாகுபலி நடிகர் ராணா ஆஜர்

ஹைதராபாதில் போதை மருந்துகள் கடத்தல் தொடர்புடைய சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் "பாகுபலி´ படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி ஆஜரானார்.

தெலுங்கு திரையுலகப் பிரமுகர்களுக்கு போதை மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் அமலாக்கத் துறை வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் நாசாவில் பணிபுரிந்த விமானவியல் பொறியாளரான அமெரிக்க குடிமகன் ஒருவர், டச்சு நாட்டு குடிமகன் ஒருவர், தென் ஆப்பிரிக்கர் ஒருவர், பி.டெக். பட்டதாரிகள் 7 பேர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையின்போது தெலுங்குத் திரையுலகின் சில பிரபலங்களின் பெயர்களும் வெளிவந்தன.

இது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக தெலங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி), தெலுங்குத் திரையுலகுக்கும், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்தது. தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் செய்பவர்களாகவோ, போதைப் பொருள்களை உபயோகிப்பவர்களாகவோ தொடர்பு இருக்கிறதா என்று கண்டறிவதற்காக இந்த விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் முடி மற்றும் நகங்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஹைதராபாதில் போதை மருந்துகள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு "பாகுபலி´ நடிகர் ராணா உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த 10 பேருக்கு அமலாக்கத் துறை அண்மையில் தகவல் அனுப்பியிருந்தது. இந்த விவகாரம் தொடர்புடைய சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு நடிகர் ராணா ஆஜரானார்.

தெலுங்குப்பட இயக்குனர் புரி ஜகந்நாத், நடிகைகள் சார்மி கௌர், நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் நந்து ஆகியோர் அமலாக்கத் துறை முன்னிலையில் ஏற்கெனவே ஆஜராகியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் தெலுங்கு திரையுலகப் பிரமுகர்களின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை.