மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Prabha Praneetha
4 years ago
மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.

நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ-மாணவிகள் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையவைக்கிறது.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது.

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சனையாக கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது.

அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4