போதைப் பொருள் கடத்தல் வழக்கு – விக்ரம் பட நடிகை ஆஜர்!
போதைப் பொருள் கடத்தலுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடிகை முமைத் கான் புதன்கிழமை ஆஜரானாா். இந்த வழக்கு தொடா்பாக விசாரிக்கப்பட்ட எட்டாவது நபா் இவா் ஆவாா்.
தெலுங்கு திரையுலகப் பிரமுகா்களுக்கு போதைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அமலாகக்கத் துறை கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. விசாரணையின் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி), தெலுங்குத் திரையுலகைச் சோ்ந்த நடிகா்கள், இயக்குநா்களிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முமைத் கான் உள்ளிட்ட 10 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடிகை முமைத் கான் புதன்கிழமை ஆஜரானாா்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியில் இருந்து தெலுங்கு திரைப்பட இயக்குநா் புரி ஜகந்நாத், நடிகைகள் சாா்மி கெளா், ரகுல் பிரீத் சிங், நடிகா்கள் நந்து, ராணா டக்குபதி, பி.நவ்தீப் ஆகியோா் இதுவரை அமலாக்கத் துறை முன்னிலையில் ஆஜராகியுள்ளனா்.
போதைப் பொருள் கடத்த விவகாரம் தொடா்பாக, நாசாவில் பணிபுரிந்த அமெரிக்க பொறியாளா், நெதா்லாந்தைச் சோ்ந்த ஒருவா், தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த ஒருவா், பி.டெக். பட்டதாரிகள் 7 போ் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.