11 ஆண்டுகளாக வீட்டு அறையில் மறைத்து வைத்த காதலியை மணந்த இளைஞர்; பெற்றோர் அதிர்ச்சி!
ஜூன் 7, 2021 அன்று, லாரி டிரைவராக பணிபுரியும் அலிஞ்சுவட்டில் பஷீர் தனது சகோதரர் அலிஞ்சுவட்டில் ரஹ்மானை பாலக்காட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நென்மாரா எனும் நகரில் இருசக்கர வாகனத்தில் செல்வதைக் கண்டுள்ளார். ரஹ்மானின் குடும்பத்தினர் மார்ச் 10 ம் தேதிதான் அவரை கடைசியாக பார்த்தனர். எனவே பஷீர் அவரைப் பின்தொடர்ந்தார், பின்னர் காவல்துறைக்கும் தெரிவித்ததை தொடர்ந்து ரஹ்மானை கைது செய்தனர். அவரை அருகிலுள்ள விதானசேரி என்ற இடத்தில் உள்ள அவர் தங்கியுள்ள வாடகை வீட்டிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண் இருப்பதை கண்டறிந்தனர். அவரை தனது மனைவி என்று போலீசாரிடம் ரஹ்மான் கூறினார். அவரிடம் விசாரித்ததில், அவர் பெயர் சஜிதா, அவருக்கு வயது 35, அவர் 11 வருடங்களாக காணாமல் போயிருந்தார் என்றும் போலீசார் அறிந்துகொண்டனர். ஆனாலும், ரஹ்மானின் மேல் போலீசார் சந்தேகம் கொண்டிருந்தனர். சஜிதா அவருடன் பத்து வருடங்களுக்கு மேலாக தனது குடும்பத்தில் இருந்து விலகி வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
"நென்மாரா அருகே உள்ள அயலூர் நகரைச் சேர்ந்த வேலாயுதன் மற்றும் சாந்தாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். பிப்ரவரி 2010 இல் உறவினர் வீட்டிற்குச் சென்ற அந்த தம்பதியரின் இரண்டாவது மகளான சஜிதா திரும்ப வரவில்லை. அதனை தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குடும்பமும், இறுதியில், அவரைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை கைவிட்டது. அவள் யாரோ ஒருவருடன் தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டாள் என்று கிராமத்தார் நினைத்தார்கள்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
சஜிதா அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் ரஹ்மானின் சிறிய வீட்டில்தான் தங்கி இருந்தார் என்றும், போலீசார் வந்து தேடிசெல்வதை அங்கிருந்து மறைத்துக்கொண்டு பார்த்ததாகவும் கூறினார். ரஹ்மானின் வீட்டில் அவர் தங்கியிருந்தது ரஹ்மான் வீட்டில் யாருக்கும் தெரியாது. ரஹ்மான் எப்போதும் கோபமான முகத்துடன் இருப்பதால், அவரிடம் யாரும் அதிகமாக கலந்துகொள்வதில்லை, அந்த வீட்டில் அவருக்கென ஒரு அறை இருந்துள்ளது, அந்த அறைக்குள் யாரையும் விடமாட்டாராம். அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் கோபமான வார்த்தைகளை வீசுவார் என்றும், ஜன்னல் கம்பிகளில் மின்சாரம் இணைத்திருக்கிறேன், திறக்க முயன்றால் ஷாக் அடிக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார். ரஹ்மான் அப்போது ஒரு எலெக்ட்ரிஷியனாக இருந்ததால், அவர் செய்தாலும் செய்திருப்பார் என்ற பயம் இருந்ததாகவும், அதனை மீறி சோதித்து பார்த்தபோது உண்மையிலேயே மின்சார இணைப்பு இருந்ததாகவும், அதன் பிறகு குடும்பத்தார் யாரும் ஜன்னலை தொடவில்லை என்று அவரது அண்ணன் பஷீர் கூறினார். பஷீர் வீட்டு விட்டு வேளியே செல்லும்போதெல்லாம் அந்த அறை பூட்டி இருக்கும், அதனை உள்ளே இருந்து மட்டுமே திறக்கும்படி செய்துவிட்டு செல்வார்.
தான் துவைக்கும் துணிகளை அறைக்குள்ளேயே உலர்த்திக்கொள்வார் என்றும், ஒரு சிறிய டிவியில் ஏர்ஃபோன் பயன்படுத்தி டிவி பார்ப்பார் என்றும், காலை கடன்களுக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினார் என்றும், தன் கணவரின் உணவை தன்னோடு பகிர்ந்து உண்ணுவார் என்றும் சஜிதா தான் 11 வருடம் அறைக்குள்ளே வாழ்ந்த அனுபவத்தை கூறினார். சஜிதா வெளியில் செல்வதற்காக ஜன்னலில் ஒரு சில கம்பிகளை மட்டும் அகற்றி வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்றும் வந்திருக்கிறார். ரஹ்மானுக்கு பெண் பார்க்கத் தொடங்கியபோதும் ஆட்சேபனை எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் நாட்களை மட்டும் தட்டி கழித்து வந்திருக்கிறார்.
போலீசார் தம்பதியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, சஜிதாவை திருமணம் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவிப்பார்கள் என பயப்படுவதாக ரஹ்மான் நீதிபதியிடம் கூறினார். சஜிதாவும் ரஹ்மானுடன் இருக்க விரும்புவதாக கூறியதை அடுத்து நீதிமன்றம் அவர்களை ஒன்றாக வாழ அனுமதித்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு, சஜிதா ஒருவழியாக 11 வருட அறை வாழ்வில் இருந்து வெளியேறினார். ரஹ்மானும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்து வெளியேறினார். பின்னர் அவர்கள் வேறு இடத்தில் வாழத் தொடங்கினர். அதன் பின்னர் கடந்த புதன் அன்று திருமணம் செய்து சட்டப்பூர்வமான வாழ்வை தொடங்கியிருக்கிறார்கள். மத சார்பற்ற திருமண விழாவில் சஜிதாவின் பெற்றோர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் ரஹ்மானின் பெற்றோர் உட்பட அவர்களின் உறவினர்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.