சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
சரத்குமார், சுஹாசினி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அரசியலில் பிஸியான பிறகு சரத்குமார் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது கௌரவ வேடத்தில் தோன்றினாலும், நாயகனாக அவரது நடிப்பில் படங்கள் அதிகம் வரவில்லை. அந்தக்குறை இந்த வருடம் தீரப்போகிறது.
சரத்குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை திருமலை பாலுச்சாமி இயக்குகிறார். இதன் பூஜை இன்று காலை நடந்தது. சரத்குமார், சுஹாசினி, இயக்குனர் திருமலை பாலுச்சாமி, தயாரிப்பாளர் ரோஷ் குமார் உள்ளிட்டவர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.
"முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இந்தப் படம் இருக்கும். சுஹாசினி மீனாட்சி என்ற முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மண்சார்ந்த கதைக்கு சரத்குமார் சரியாக இருப்பார் என அவரிடம் கதை கூறினோம். கதையை கேட்டவர் உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்" என திருமலை பாலுச்சாமி கூறினார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சித்திக், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கின்றனர். குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, வேத்சங்கர் சுகவனம் படத்துக்கு இசையமைக்கிறார்.
"இயக்குனர் திருமலை பாலுச்சாமி இதுவரை சொல்லப்படாத விஷயங்களுடன், இந்த சமூதாயத்துக்கு தேவையான கருத்துக்களை வைத்து மிக நேர்த்தியாக இந்தக் கதையை எழுதியுள்ளார். ஆகவே, இந்தப் படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் சிறந்த படமாக இருக்கும்" என தயாரிப்பாளர் ரோஷ் குமார் நம்பிக்கையுடன் கூறினார்.