19 வருட கனவு நனவானது - ஆனந்தத்தில் நடிகர் ஜெய்
நடிகர் ஜெய், பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி, குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய்.
இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ சிவா’ படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியதாவது: “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன்.
இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிவ சிவா படத்துக்காக அவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடல் வரிகளை வைரமுத்து எழுதி உள்ளார்.
அனல் ஆகாஷ் இப்பாடலை பாடி உள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.