அனபெல் சேதுபதி விமர்சனம்
நடிகர் | விஜய் சேதுபதி |
நடிகை | டாப்ஸி |
இயக்குனர் | தீபக் சுந்தர்ராஜன் |
இசை | கிருஷ்ண கிஷோர் |
ஓளிப்பதிவு | ஜார்ஜ் கௌதம் |
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தில் யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுகிறார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகி டாப்சி தனது குடும்பத்தினருடன் வந்து தங்குகிறார்.
அதன்பின் வரும் பௌர்ணமி தினத்தில் டாப்சிக்கு என்ன ஆனது? அரண்மனையில் வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, 1940களின் பின்னணியில் வரும் காட்சிகள் வருகிறார். படத்தில் குறைவான காட்சிகள்தான் என்றாலுமே கூட நடிப்புக்காக எந்த ஒரு மெனக்கெடலும் அவர் எடுத்தது போல் தெரியவில்லை.
படத்தின் முழுக் கதையுமே டாப்சியை சுற்றியே நகர்கிறது. எனினும் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு எந்த காட்சியும் இல்லாதது வருத்தம்.
ராதிகா, ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி என நல்ல நடிகர்கள் இருந்தாலும் அதிகம் ஜொலிக்கவில்லை. வழக்கமான வில்லனாக வந்து சென்றிருக்கிறார் ஜெகபதி பாபு. யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே கைக்கொடுத்து இருக்கிறது.
பேயையும் நகைச்சுவையையும் கலந்து வெளியான பல திரைப்படங்கள் பாணியில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.
அரண்மனை, அதற்குள் நடக்கும் மர்ம மரணங்கள், பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் திருடர்கள் என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, போக போக அந்த சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. கதாபாத்திரங்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.
கிருஷ்ண கிஷோர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணியை ஓரளவிற்கு கவனிக்க வைத்திருக்கிறார். பிரம்மாண்ட அரண்மனையை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் கௌதம். இவரின் உழைப்பு படத்திற்கு பலம்.